வார விடுமுறை: 890 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி 890 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21, 22) சென்னையிலிருந்தும் பிற இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.20) 260 பேருந்துகளும், சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 65 பேருந்துகள் என மொத்தம் 130 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் 200 கூடுதல் பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனக்கிழமைகளில் தலா 20 பேருந்துகளும் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 890 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.