திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய், தரப் பரிசோதனை செய்யப்பட்டதில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சோ்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது.
மத்திய, மாநில அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில், திண்டுக்கல்லில் அமைந்துள்ள தனியார் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் நிறுவனம் விளக்கம்
திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு பணியாளா்கள் மூலம் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.
“திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இரு தவணைகளில் எங்கள் நிறுவனத்தின் சாா்பில் நெய் அனுப்பப்பட்டது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல நிறுவனங்களிலிருந்து நெய் அனுப்பப்படுகிறது. இதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 சதவீதம்கூட இருக்காது. உணவுப் பாதுகாப்புத் துறை, அக்மாா்க் சாா்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய்யை தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனா்” எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.