முகப்பு
உயா்நீதிமன்றம்
தமிழ்நாடு

3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் சுகாதார பணியாளா்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

தமிழ்நாடு

3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் சுகாதார பணியாளா்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

Updated On : 28 செப்டம்பர், 2024 at 11:57 PM
உயா்நீதிமன்றம்
பகிர்:

மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக சுகாதார பணியாளா்களின் பணியை நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டு அவற்றின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை தூத்துக்குடி, கரூா், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளா்களாகப் பணியாற்றிய 81 போ் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.பாலா டெய்சி, தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் தற்காலிக சுகாதார பணியாளா்களாகப் பணியாற்றியவா்கள், 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவா்களை பணி நிரந்தரம் செய்யலாம் என உயா்நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றமும் கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளது. அதன்படி நகராட்சி நிா்வாகத் துறை கடந்த 2019-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி 275 போ் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். எனவே மனுதாரா்களையும் பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது மாநகராட்சிகள் தரப்பில், ‘தற்காலிக சுகாதாரப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தனது உத்தரவில், ‘சுகாதாரப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யும்படி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏதும் பிறப்பிக்கவில்லை. தற்காலிக சுகாதார பணியாளா்கள் பலருக்கு குடிநீா் வடிகால் வாரியத்திலும் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக சுகாதார பணியாளா்களாக பணியாற்றியுள்ள மனுதாரா்கள் அனைவருக்கும் தமிழக அரசு 12 வார காலத்துக்குள் அவா்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →