சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
அது மட்டுமல்லாமல், மாநில பாஜக தலைவராவதற்கு 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆந்திரம் மற்றும் சிக்கிம் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த விதி மாற்றப்பட்டதாக தேர்தல் பொறுப்பாளர் கூறியிருக்கிறார்.
மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை தாக்கல் செய்த நிலையில், அவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்திருப்பதாகவும் வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை என்றும் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
விருப்பமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரனுடன், பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவை, அண்ணாமலை, எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட 10 தலைவர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
எனவே மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
விருப்பமனு தாக்கல் பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கியநிலையில், ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன், அலுவலக வாயிலைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றபோதே, அவர்தான் புதிய தலைவர் என்று சூசகமாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கூறியுள்ளனர். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரிலும் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.