மதுரை அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலைக்கு செல்லாமல், ஊதியம் பெறுவது குறித்து பதிலளிக்க போக்குவரத்துத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர்கள் வேலைக்குச் செல்லாமல், சம்பளம் மற்றும் படி பெறுவதாக, 2019 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த மனுவில் தெரிவித்ததாவது, அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என 2018 ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இருந்தபோதிலும், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர்கள் மாற்றுப்பணி என்ற பெயரில், வேலைக்குச் செல்லாமல் சம்பளம் மற்றும் இதர படிகளைப் பெறுவது சட்டவிரோதம்.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் 16 கிளைகளிலும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என 208 பேர், மாற்றுப்பணி என்று கூறி, எந்த வேலையும் செய்யாமல், ஊதியம் மற்றும் படிகளை மட்டும் பெற்று வருகின்றனர்.
இவர்களால் மட்டும் மாதந்தோறும் ரூ. 60 லட்சத்துக்கும்மேல் செலவிடப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கி வரும்நிலையில், வேலைக்கு செல்லாமல் ஊதியம் பெறுவதால், மேலும் நட்டம் ஏற்படுகிறது.
ஆகையால், வேலைக்கு செல்லாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர படிகளை நிறுத்தவும், அவர்களை பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.