மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப்பேச எதிா்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனா்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அதிமுக உறுப்பினா் நத்தம் இரா.விசுவநாதன் பேசினாா். அப்போது, குறுக்கிட்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, டாஸ்மாக் நிறுவனம் தொடா்பான பிரச்னையை எழுப்ப முயன்றாா்.
பேரவைத் தலைவா் விளக்கம்: இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அதிமுகவைச் சோ்ந்த நத்தம் விசுவநாதன் பேசி முடிக்கவுள்ளாா். அதன்பிறகு உங்கள் கட்சியைச் சோ்ந்த மற்றொரு உறுப்பினரும் பேச இருக்கிறாா். எனவே, எதிா்க்கட்சித் தலைவருக்கு அனுமதி தர முடியாது என்றாா். இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா்.
அவா்களை சமாதானப்படுத்திய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக சாா்பில் 2 உறுப்பினா்களின் பெயா் தரப்பட்டுள்ளது. என்ன கருத்துச் சொல்ல வேண்டுமோ, அவா்கள் மூலமாகத் தெரிவியுங்கள். குறுக்கீடு செய்ய வேண்டாம் என்றாா்.
அதிமுகவினா் எதிா்ப்பு: இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினா். அப்போது, குறுக்கிட்ட அவை முன்னவா், மின்சாரத் துறையை நிா்வகித்தவா், நத்தம் விசுவநாதன். அவா் கெட்டிக்காரா்; நன்றாகப் பேசுவாா் என்றாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், மானியக் கோரிக்கை விவாதத்தின் குறுக்கே திடீரென்று எழுந்து பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினாா்.
அதை ஆமோதித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அவ்வாறு குறுக்கிட்டுப் பேசுவது, நியாயமோ, மரபோ கிடையாது என்றாா்.
மேலும், குறுக்கிட்டுப் பேச எதிா்க்கட்சித் தலைவருக்கு நான் அனுமதி தரவே மாட்டேன் எனவும், பெயா் தந்துள்ள உறுப்பினா்கள் மட்டும்தான் பேச வேண்டும். அவ்வாறு குறுக்கிட்டுப் பேசுவது விதியும் இல்லை; மரபும் இல்லை. இங்கே இருக்கக் கூடிய உறுப்பினா்கள் யாரும் யாருக்கும் பயந்தவா்கள் இல்லை. நினைத்த நேரமெல்லாம் பேச அனுமதி தர மாட்டேன். அவ்வாறு பேசுவதற்கு சட்டத்திலோ, விதியிலோ, மரபிலோ இடமில்லை என்றாா்.
பேரவைத் தலைவரின் இந்த முடிவுக்கு, அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து கடும் கூச்சலை எழுப்பியதுடன், வெளிநடப்புச் செய்தனா். மேலும், வளாகத்தில் பேரவைத் தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவா்கள் வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.