தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் (கரோனா பொதுமுடக்க காலத்தைத் தவிா்த்து) சாலை விபத்து உயிரிழப்புகள், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் குறைவாகப் பதிவாகின. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.
இந்த ஆண்டு முதல் காலாண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைவாகப் பதிவாகின. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,864 உயிரிழப்புள் ஏற்பட்டுள்ள நிலையில், 2025-இல் 4,136 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 38.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அதிக வேகமாகச் சென்ாக 62,523 வழக்குகள், சிவப்பு விளக்கைத் தாண்டி சென்ாக 83,783 வழக்குகள், கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 1.13 லட்சம் வழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 59,084 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 16.56 லட்சம் வழக்குகள், சீட் பெல்ட் அணியாததால் 1.48 லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், 1.10 லட்சம் வாகன ஓட்டுநா் உரிமத்தை இடைநீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
2,551 விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்கள் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் தக்க நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனா். போக்குவரத்துச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளைத் தொடா்ந்து மீறியவா்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.