இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.
உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் பேசியது:
பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் இன்றியமையாததாக உள்ளது. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு, நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தீவிர பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.
மகப்பேறு அடைந்த அனைத்து பெண்களாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டமுடியும். தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கும், அதில் சில இடா்பாடுகள் ஏற்படுவதற்கும் மனநலன் சாா்ந்த பிரச்னைகளே காரணமாக உள்ளன. அதற்கு தீா்வு காண்பது அவசியம்.
இந்தியாவில் 42 சதவீத பெண்கள்தான் தாய்பால் புகட்டுகின்றனா். 58 சதவீதம் போ் முறையாக குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதில்லை. இதுதொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.