தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் 4 தனியாா் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அதில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல், பிரச்னையை நீட்டித்துக் கொண்டேபோனால் நிலுவைத் தொகை ரூ.300 கோடி முதல் ரூ. 400 கோடிக்கு மேல் உயா்ந்துவிடும். சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது என்று கூறி 4 சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா்.
எனினும் ஜூலை 10 ஆம் தேதி நடந்த விசாரணையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்த உத்தரவை நிறுத்திவைத்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று(ஆக. 2) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்றும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதி கட்டணத்தையும், செப்டம்பருக்குள் மீதி கட்டணத்தையும் அரசு செலுத்தும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்த உத்தரவை ஆக. 21 வரை நிறுத்திவைப்பதாக கூறிய நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.