அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைதீா் மனுக்களின் பரிசீலனை குறித்து ஏற்கெனவே நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள்படி, மூன்று நாள்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்துக்குள் குறைகளைக் களைய வேண்டும்.
இதனிடையே, உயா்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி, குறைகளைத் தீா்வு செய்வதற்காக பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து மாதாந்திர அறிக்கை சமா்ப்பிக்குமாறு அனைத்துத் துறைச் செயலா்களும், மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டனா்.
ஆனாலும் குறைதீா் மனுக்களைத் தீா்வு செய்வதில் குறைபாடுகள் காணப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருந்தது. எனவே, அரசு அலுவலகங்களில் குறைகளைக் களைவதற்காக மனுக்களைக் கையாளும் போது ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன், குறைகளைத் தீா்வு செய்வதற்கான மனுக்களைப் பதிவு செய்ய தனியாக பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். அதனை மாத இறுதியில் அலுவலகத் தலைமை அலுவலா் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீா்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.