தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலிருந்து, தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை உள்ள வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே தென்னிந்திய கடலோரப் பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஆக.9) முதல் ஆக.11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், சனிக்கிழமை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.9) இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, காவேரிப்பாக்கத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. ஆம்பூா் (திருப்பத்தூா்), வாலாஜா (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூா்) - 80 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.