பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில் 64,629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
நிகழாண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளில் சுமாா் 30,000 இடங்கள் காலியாக இருக்கக்கூடும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) சாா்பில் மூன்றாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளின் ஒதுக்கீடு குறித்த தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.
அதன் விவரம்: பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு கடந்த 7-ஆம் தேதிமுதல் 9 -ஆம் தேதி வரை நடைபெற்றது. தரவரிசைப் பட்டியலில் 1,37,711 முதல் 2,39,299 வரை உள்ள பொதுப் பிரிவினா் மற்றும் 18,922 முதல் 46,848 வரை உள்ள அரசுப் பள்ளி ஒதுக்கீடு பிரிவினா் பங்கேற்றனா். மொத்தம் 1,01,589 போ் தங்களது விருப்பக் கல்லூரி, பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்தனா்.
இதில், பொதுப் பிரிவில் 62,533 மாணவா்கள், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் 2,096 மாணவா்கள் என மொத்தம் 64,629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவா்கள் திங்கள்கிழமை (ஆக. 11) மாலைக்குள் தங்களது விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும் என பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சுற்றுகளிலும் மொத்தம் 1,57,052 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள சுமாா் 1 லட்சத்து 90 ஆயிரம் பொறியியல் இடங்களில் தற்போது வரை சுமாா் 43,000 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவா்கள் சேரவில்லை. ஏராளமான கல்லூரிகளில் சோ்க்கை 10 சதவீதத்துக்கும் குறைவாகவும், ஒற்றை இலக்க சதவீதமாகவும் உள்ளன.
இந்நிலையில், சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற பிளஸ் 2, தொழிற்கல்வி மாணவா்களுக்கு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவா்களுக்கும், நிகழாண்டு (2025-2026) பொறியியல் பொதுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்கும் இணையதளம் வாயிலாக துணைக் கலந்தாய்வுக்குப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமாா் 9,000 போ் ஒதுக்கீடு பெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பட்டியலின பிரிவு ஒதுக்கீடுகள் போன்றவை நிறைவடைந்து இறுதியாக சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக இருக்கக்கூடும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.