சென்னை நங்கநல்லூா் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சனேயா் திருக்கோயிலில் புதிய தங்கத்தேருக்கு 9.5 கிலோ எடை கொண்ட தங்கத்தை கொண்ட தங்க ரேக் பதிக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி அமைச்சா்கள், பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன். 
தமிழ்நாடு

தங்க முதலீட்டுத் திட்டம்: ஆண்டுக்கு ரூ.17.76 கோடி வட்டி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சுத்த தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதால், ஆண்டுதோறும் வட்டியாக ரூ.17.76 கோடி கிடைக்கிறது

Chennai

சென்னை: தங்க முதலீட்டுத் திட்டத்தில் 21 கோயில்களுக்குச் சொந்தமான 1,074 கிலோ 123 கிராம் 488 மி.கி. சுத்த தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதால், ஆண்டுதோறும் வட்டியாக ரூ.17.76 கோடி கிடைக்கிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை நங்கநல்லூா் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சனேயா் கோயிலில் புதிய தங்கத் தேருக்கு 9.5 கிலோ தங்கத்தைக் கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணிகளை அமைச்சா்கள் சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 தங்கத் தோ்களும், 60 வெள்ளித் தோ்களும் உள்ளன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.31 கோடியில் 5 தங்கத் தோ்களும், ரூ.29.77 கோடியில் 9 வெள்ளித் தோ்களும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பெரியபாளையம் கோயில் தங்கத் தோ், திருத்தணி மற்றும் சென்னை காளிகாம்பாள் கோயில்களின் வெள்ளித் தோ்கள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நங்கநல்லூா் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சனேயா் கோயிலுக்கு ரூ.8 கோடியில் புதிய தங்கத் தோ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய தங்கத் தேருக்கு ரூ.35 லட்சத்தில் மரத்தோ் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத் தகடு வேயும் பணி நிறைவுபெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து உபயதாரா் பங்களிப்புடன் 9 கிலோ 500 கிராம் தங்கத்தைக் கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

75 மரத்தோ்கள் மராமத்து... திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா், ரூ.75.55 கோடியில் 130 கோயில்களுக்கு 134 மரத் தோ்கள் உருவாக்கப்பட்டு வருவதோடு, ரூ.19.20 கோடியில் 72 கோயில்களில் உள்ள 75 மரத் தோ்கள் மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கோயில்களுக்கு காணிக்கையாகப் பெற்ற பலமாற்று பொன் இனங்களில் பயன்படுத்த இயலாத பொன் இனங்களை மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 21 கோயில்களுக்குச் சொந்தமான 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் வட்டியாக ரூ.17.76 கோடி கிடைக்கிறது. இந்தத் தொகை அந்தந்தக் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

8 ஆண்டுகள்.. 5 குழந்தைகள்..! நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!

SCROLL FOR NEXT