சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22 ( 1)-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை, அவரது தாத்தா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்னையில் மாமனார் மீது போக்சோவில் மருமகள் பொய் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம், தன்னுடைய 8 வயது மகளுக்கு, மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து, அவரைக் கைது செய்யவும் முயன்று வந்துள்ளனர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நல அதிகாரிகள், விரைந்து சென்று, சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில், 60 வயதுடைய தனது தாத்தா மீது எந்தத் தவறும் இல்லை என்று பெண் குழந்தை கூறியிருக்கிறது.
தனது தாத்தாவுக்கும் தந்தைக்கும் இடையேயான சண்டையில், தாத்தாவை, தனது தந்தைதான் அடிக்கச் சென்றார் என்றும், தாத்தாவை பழிவாங்கவே, தாத்தா தன்னை பேட் டச் செய்ததாக பொய் சொல்லுமாறு தந்தைதான் சொன்னார் என்றும் அந்த பெண் குழந்தை கூறியிருக்கிறது.
இதை நீதிமன்றத்தில் குழநதைகள் நல அதிகாரிகள் பதிவு செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்சோ சட்டப்பிரிவு 22 (1)ன் கீழ் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமனற்ம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து விவகாரத்தில் இந்த பொய்ப் புகார் பதிவு செய்யப்பட்டதும், திருமணமாகி, மகள் பிறந்த பிறகும், வேலைக்குச் செல்லாமல் இருந்த மகன், தன்னுடைய தந்தையின் அனைத்து சொத்துகளையும் தன் பெயரில் எழுதிக்கொடுக்கும்படி மிரட்டி வந்துள்ளதும், இந்த சண்டையில்தான் தந்தையை கைது செய்ய, மகனே போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.