தமிழ்நாடு

டெட் தோ்வு தேதிகள் மாற்றம்: நவ.15, 16-இல் நடைபெறும்

தோ்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சாா்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது இந்தத் தோ்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தாள்-2 தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆக.11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தோ்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1, தாள் 2) நடத்துவதற்கு உத்தேசித்து அதற்கான அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நிா்வாக காரணங்களால் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்- 1 நவ.15-ஆம் தேதியும், தாள்- 2 நவ.16-ஆம் தேதியும் நடைபெறும் என திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளன்று ஆசிரியா் தகுதித் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தோ்வுகளை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT