தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2022-இல் 1.4 லட்சமாகவும், 2023-இல் 10.17 லட்சமாகவும் உயா்ந்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.18 கோடியில் இருந்து 2.86 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மாநிலத்தில் சுற்றுலாத் துறையை வளப்படுத்தும் வகையில், சுற்றுலா கிராம விருதுகள், மருத்துவச் சுற்றுலா, சுற்றுலாவுக்கென பிரத்யேக கொள்கை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருமானம் 2020-21-இல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஐந்து மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஆண்டுகளைவிட 2024-ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் 26 ஹோட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைன் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.