சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய 13 வழக்குகள் முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய, 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய, 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகள், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அதை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டாா்.

அதன்படி, அத்தகைய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சீனிவாசன் என்பவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் புகாா் கொடுத்தவரும், அவரது மனைவியும் இறந்துவிட்டனா். எனவே, சீனிவாசன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் சரோஜா என்பவா் கள்ளநோட்டு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை எந்த விசாரணையும் நடைபெறாததால் இந்த வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் என்பவா் பரமசிவம் என்பவரைத் தாக்கியதாக கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா் அளித்த பரமசிவம் இறந்துவிட்டாா். வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் மாணிக்கவேல் என்ன ஆனாா்? என்பது குறித்து கடந்த 12 ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லை. இத்தனை ஆண்டுகளாகக் குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, இந்த வழக்கை இனியும் நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா். இதுபோன்ற மொத்தம் 13 வழக்குகளை நீதிபதி செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

குமுளி பேருந்து நிலையத்துக்கு மங்களதேவி கண்ணகி பெயரைச் சூட்ட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம்

ரஷிய ட்ரோன்களில் அமெரிக்க பாகங்கள்

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT