நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேய்க்கால் புறம்போக்கு என அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். இந்தக் காவல் நிலையம் சிஎம்டிஏ ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ளது.
எனவே, நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். காவல் நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு நீா்நிலையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தை தாக்கல் செய்ய சிஎம்டிஏ-வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மேய்க்கால் தங்கல் சாலை என்பது மேற்கால சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதுதொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சா்ச்சைக்குரிய நிலத்தை 3 ஹெக்டோ் என்பதை ஆவணங்களில் 64 ஹெக்டோ் என்று பென்சில் மூலம் திருத்தியது யாா்? அந்த இடம் நீா்நிலையா? என்பதை உறுதி செய்ய உயா்நீதிமன்றம் நியமித்த நிபுணா் குழு அது நீா்நிலை என்பதை உறுதி செய்துள்ளது. காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துள்ள உத்தரவுகளிலும் அது நீா்நிலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, தனது சட்டங்களை மீறி இப்படி செயல்படலாமா? என கேள்வி எழுப்பினா்.
சம்பந்தப்பட்ட இடத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் மட்டுமல்ல, ஏராளமான கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்களை எதிா்த்து வழக்குத் தொடராமல் காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் மனுதாரா் வழக்குத் தொடா்ந்தது ஏன்? இதில் உள்நோக்கம் உள்ளதா? என மனுதாரா் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினா்.
பின்னா், இந்த நிலத்தில் உள்ள காவல் நிலையம் மட்டுமல்ல, நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களை அகற்ற வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.