சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து மூன்று நாள்கள் கனமழை பெய்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் கடும் வெயிலும், மாலையில் பலத்த மழையுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக கனமழை பெய்திருப்பது குறித்து பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது, கடந்த 1996ஆம் ஆண்டு புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்தபோதுதான், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கனமழை பெய்துள்ளது.
அதன்பிறகு தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்தடுத்து கனமழை பதிவாகியிருக்கிறது.
இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் மழை விருந்தில் வேறு சில மாவட்டங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் எப்போதெல்லாம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறதோ, அப்போது, மாநிலத்தின் மற்ற இடங்கள் அமைதியாக இருக்கும். இப்போது, சென்னையுடன் ராணிப்பேட்டையும் சேர்ந்துகொண்டுள்ளது. தொடர்ந்து சதமடித்திருக்கிறது மழைப் பதிவு. இன்று மேலும் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பதிவான கனமழை
துரைப்பாக்கம் - 19.5 செ.மீ.
பள்ளிக்கரணை - 17.7 செ.மீ.
மேடவாக்கம் - 17 செ.மீ.
பாரிமுனை - 15.9 செ.மீ.
மடிப்பாக்கம் - 15.7 செ.மீ.
ஈஞ்சம்பாக்கம் - 14 செ.மீ.
இன்று எங்கெல்லாம் கனமழை?
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன்படி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், செனாய் நகா், அமைந்தகரை, முகப்போ் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பெய்தது.
வடசென்னை பகுதிகளில் காலை மழை பெரிய அளவில் பெய்யாவிட்டாலும், அதனை ஈடு செய்யும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை மழை சதமடித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.