முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக. 26 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.
காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.
இதற்காக திமுக எம்.பி. வில்சன் நேரில் சென்று பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.
இன்று காலை விழா அதற்கான அழைப்பிதழை திமுக எம்.பி. வில்சன், பஞ்சாப் முதலமைச்சரிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வரவேற்றார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திமுக அரசு !
இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.