குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றுள்ளார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, மாணவர்களுக்கு உணவைப் பரிமாறிய முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள்.. மகிழ்ச்சிக்குரிய நாள்.
எப்படி நீங்கள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ.. அதுபோலவே நானும் இன்றைய நாள் முழுவதும் ஆக்டிவா இருப்பேன். இந்தத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால் இதைவிட மகிழ்ச்சியானது என்ன இருந்துவிடப்போகிறது.
இது மகிழ்ச்சிகுரிய நாளும்கூட.. இங்கு மரியாதைக்குரிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” (விளக்கம் : நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே நல்ல நாடு) என வள்ளுவர் கூறியுள்ளார்.
வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. நீதிக்கட்சி காலத்திலும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை செலவு என நான் சொல்ல மாட்டேன். இது சிறப்பான சமூக முதலீடு!
எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு. மாணவச் செல்வங்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து இந்த முதலீட்டை தமிழ்நாடு அரசு செய்கிறது.
நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றினால், அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி” என்றார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் செளமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது நகர்புறத்தில் அரசு உதவிப்பெறும் 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 3.06 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.