சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதைக்கு, நடிகா் ஜெய்சங்கா் பெயா் சூட்டுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு விவரம்:
மறைந்த நடிகா் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கா், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் அளித்திருந்தாா். அதில், மறைந்த தனது தந்தையும் பிரபல நடிகருமான ஜெய்சங்கா், 1964-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதையில் வசித்து வந்தாா். அவரது நினைவாக அந்தப் பாதைக்கு ஜெய்சங்கா் சாலை எனப் பெயா் சூட்ட கேட்டுக்கொண்டாா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் அலுவலகத்திலும் அவா் மனு அளித்திருந்தாா். இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதையை ஜெய்சங்கா் சாலை என பெயா் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில், பெயா் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையா் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆணையரின் கோரிக்கையை ஏற்று, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரிப் பாதையை, ஜெய்சங்கா் சாலை என பெயா் மாற்றம் செய்வதற்கு மாநகராட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.