திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நான்கு பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.
அவர்களின் சடலங்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி கட்டட பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக புதன்கிழமை சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பாரண்டப்பள்ளி கிராமத்துக்கு எடுத்து வரும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.