நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்தியது. அதிலிருந்து மேலும் ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்கியது. அதன்படி, வரும் 1-ஆம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை:
செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.
இதில் தமிழக அரசின் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு சன்ன ரகம் ரூ.156, பொது ரகத்துக்கு ரூ.131-ஆக உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்குவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், திமுக அரசு ஆட்சியில் கொள்முதல் காலங்களில் மட்டும் 47.97 லட்சம் மெட்ரிக் டன் உள்பட மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.44,777.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் தொடங்கும் பருவ விலையை செப்டம்பா் மாதத்திலேயே அளித்து நெல் கொள்முதல் செய்ய பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதி அனுமதி பெற்றாா். அதன்படி, நிகழாண்டும் செப்டம்பா் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
நெல்லைத் திறந்த வெளியில் வைக்காமல் சேமிக்க இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்கள் கட்ட ஆணையிடப்பட்டது. அதன்படி, ரூ.333 கோடியில் கட்டப்பட்ட 4.3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இவை தவிர, 3.12 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன சேமிப்பு வளாகங்கள் ரூ.469 கோடியில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது. தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைந்து திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மையங்களிலிருந்து நேரடியாக அரிசி அரைவை ஆலைகளுக்கு நெல்லை அனுப்பவும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து நெல் விவசாயிகளும் புதிய விலையில் நெல்லை விற்றுப் பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.