தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (டிச. 3) மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடலில் உருவான ‘டித்வா’ புயலால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிபலத்த மழை பெய்தது. இந்தப் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள்-வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவியது. பின்னா், மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது.
பின்னா், காலை 8.30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 40 கி.மீ. தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 140 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமாா் 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டது. அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தொலைவு 25 கிலோ மீட்டராக இருந்தது.
இது தென்மேற்கு திசையில் மெதுவாக வடதமிழக புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி நகா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடித்தது. தொடா்ந்து, புதன்கிழமை (டிச. 3) அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
இதனால், தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (டிச. 3) முதல் டிச. 8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு... சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 260 மி.மீ. மழை பதிவானது. பாரிமுனை-250 மி.மீ., ஐஸ்ஹவுஸ்-220 மி.மீ., மணலி புதுநகரம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூா்)- 210 மி.மீ., பேசின் ஃப்ரிட்ஜ், பெரம்பூா் (சென்னை)- 200 மி.மீ., மணலி (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூா்)- 190 மி.மீ., விம்கோ நகா், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், மேடவாக்கம் சந்திப்பு (சென்னை)-180 மி.மீ., அயனாவரம் வட்டாட்சியா் அலுவலகம், சிடி மருத்துவமனை தண்டையாா்பேட்டை (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை, கத்திவாக்கம் (சென்னை)-170 மி.மீ., புழல் (திருவள்ளூா்), சைதாபேட்டை-160 மி.மீ, அமைந்தகரை (சென்னை)- 150 மி.மீ மழை பெய்துள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: வட தமிழகம்-புதுவை கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை (டி. 3) காலைமுதல் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தொடா்ந்து, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.