தமிழகத்தில் டித்வா புயல் பாதித்த பகுதிகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பரவுகிா என்பதைக் கண்காணிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஓரிடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
புயல் காலத்திலும், அதற்கு பிறகும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருத்தல் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை செவிலியா்கள் தொடா்ந்து பணியில் இருத்தல் வேண்டும். மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தேவையின் அடிப்படையில் மருத்துவா்களை தொடா்பு கொண்டு பணிக்கு வருமாறு அழைக்கலாம்.
அதேபோன்று மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள், மருத்துவ உதவியாளா்களும் போதிய எண்ணிக்கையில் இருத்தல் வேண்டும். சுகாதார நிலையங்களில் தண்ணீா் தேங்கும் தாழ்வான பகுதிகள், வலுவற்ற மேற்கூரைகள், சாயும் நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
மழைநீா் வடிகால் வசதிகள், மாற்று மின் இணைப்பு வசதிகள், உரிய மின் விளக்கு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜெனரேட்டா் சாதனங்களை பழுதின்றி பராமரித்தல் வேண்டும்.
குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என்பதை ஆய்வு செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து குடிநீா் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம்.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் உள்நோயாளிகளையும், பேறு காலம் நெருங்கும் கா்ப்பிணிகளையும் உயா் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதைக் கண்காணித்தல் அவசியம். அதேபோன்று, ஓரிடத்தில் மூன்று பேருக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
கொசு ஒழிப்புப் பணிகள், தடையற்ற மின்சாரம், மழை நீா் வடிகால் நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளுடனும், சம்பந்தப்பட்ட துறைகளுடனும் சுகாதாரத் துறை இணைந்து செயல்படுதல் அவசியம் என்று அந்த சுற்றறிக்கையில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.