சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(டிச. 3) ஆய்வு மேற்கொண்டார்.
டிட்வா புயலால் தமிழகத்தில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வங்கக்கடல் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் உள்ள டிட்வா,அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"டிட்வா புயல் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு செய்தோம்.
தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உயிரிழப்புக்கள், கால்நடைகள் இறப்பு, நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
பொது மக்களுக்கான உதவிகள் உடனடியாக செய்திடும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.