துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.  
தமிழ்நாடு

இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 300 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளும், ரூ. 32 கோடியில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவிகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தில் பெண்கள் இதுவரை 960 கோடிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 கோடிப் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் மாதத்துக்கு ரூ. 900 முதல் ரூ. ஆயிரம் வரை பெண்கள் மிச்சப்படுத்துகின்றனர்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியிருக்கிறோம்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க சிலர் முயற்சி செய்வதை அறிந்த முதல்வர், 3 மாதப் பணத்துடன் கோடைக்காலத்துக்கு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரத்தை வழங்கியிருக்கிறார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 30 விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட கலைஞர் விளையாட்டுத் தொகுப்பை கிராமப்புற ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார். தற்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 300 தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருந்த நிலையை மாற்றி, பங்கேற்பவர்களாகவும் வெற்றி பெறும் வாய்ப்பையும் முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார். தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெறுவோருக்கு அதிக ரொக்கப் பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்துகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இதுவரை 120 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு விரைவில் அரசு வேலை இரு நாட்களில் வழங்கப்படும். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இத்தனைப் பேருக்கு வேலை வழங்கியது திமுக அரசுதான்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 380 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.

மாநிலம் முழுவதும் 141 சிறிய விளையாட்டரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 3 கோடியில் சிறிய அளவிலான விளையாட்டரங்கம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை ஆகிய 3 தொகுதிகளிலும் சிறிய விளையாட்டரங்கங்கள், மாவட்ட விளையாட்டரங்கில் ரூ. 3.5 கோடியில் உள்விளையாட்டரங்கம், ரூ. 6 கோடியில் ஹாக்கி டர்ப் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

பல துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதைப் போல, விரைவில் விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு முதலிடத்துக்கு வரும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவ.வீ. மெய்யநாதன், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாதன், மேயர் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, எஸ்.டி. ராமச்சந்திரன், துணை மேயர் மு. லியாகத்அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாநகராட்சி ஆணையர் த. நாராயணன் நன்றி கூறினார்.

Deputy Chief Minister Udhayanidhi Stalin said that 150 athletes will be given government jobs in the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: ஆப்கனுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ!

மத்திய அமைச்சராக இருந்தபோது 10 அல்ல, 2 கப்பல்கள்தான் வாங்கப்பட்டன: டி.ஆர். பாலு

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை! 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

SCROLL FOR NEXT