திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
நயினார் நாகேந்திரன் கைது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே (டிச.4) தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கோயில் முன்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் நீதிபதியின் உத்தரவின்படி, தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதால், உடனடியாக தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் கூறிய நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து இரவு 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளதாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேல்முறையீடு செய்ய இருப்பதை சுட்டிக்காட்டி, மலையேற யாரையும் அனுமதிக்காமல் அவர்களை கலைந்து செல்ல கூறியனர்.
இந்த நிலையில், அவர்கள் அங்கிருந்த செல்லாததால் சட்டம் ஒழுங்கு சூழலை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவில்லை.
இதன் காரணமாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை 4 மணியளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.
மாலை 6.50 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில்கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன், தனி நீதிபதியின் உத்தரவில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அரசு ஏதோவொரு நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, “மதுரை காவல் ஆணையர் போதிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் தேவையற்ற பிரச்னை வந்திருக்காது. இது பெரிய பிரச்னையாக மாறியிருக்காது. காவல் ஆணையர், நீதிமன்றத்தைவிட தன்னை உயர்வாக எண்ணியுள்ளார். மனுதாரர் தீபம் ஏற்ற சென்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார்.
144 தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்றப்பட வேண்டும். மதுரை காவல் ஆணையர் இதற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். தீபம் ஏற்றப்பட்டதும் அது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அவர்கள் தங்களது உத்தரவில் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.