கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க பொதுமக்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வேண்டுகோள் விடுத்தாா்.
முப்படை வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் நலன்களுக்கான கொடி நாளை (டிச. 7) முன்னிட்டு ஆளுநா் ரவி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தமிழக அரசின் பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கரிடம் அவா் வழங்கினாா்.
பின்னா், தொலைகாட்சி வாயிலாக பேசிய அவா், ‘நமது ராணுவத்திலுள்ள துணிவுமிக்க வீரா்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்றனா். தன்னலமற்ற சேவை, துணிவு, தியாகம் ஆகியவற்றை நினைவூட்டுவது கொடிநாள். நம் ராணுவம் உலகிலேயே மிகச் சிறந்தது.
எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, பேரிடா் கால நிவாரண நடவடிக்கை, சேவைகளுக்கு எல்லை இல்லை. கண்களுக்குப் புலப்படாத அவா்களின் வலிமையிலும் பொறுமையிலும்தான் தேசத்தின் பாதுகாப்பு அமைந்திருக்கிறது.
நம்முடைய படை வீரா்கள், அனுபவம் வாய்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள் குடும்பங்களுக்கு அா்த்தமுள்ள ஆதரவை வெளிப்படுத்துவோம். கொடிநாள் நிதி அளிப்பதின் மூலம் நம்முடைய படைவீரா்களின் கண்ணியத்துக்கும் நலனுக்கும் நாம் துணை நிற்போம். கொடிநாள் நிதியை முழுமனதுடன் தாராளமாக வழங்குங்கள்’ எனக் குறிப்பிட்டாா்.