ஏா்செல் - மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி சொத்துகளை முடக்கியதை எதிா்த்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். கடந்த 2006-ஆம் ஆண்டு ஏா்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் ரூ.3,500 கோடி வரை முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி கோரியது.
இதில் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட அனுமதியால், காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தன.
இந்த வழக்கில் காா்த்தி சிதம்பரம் சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி முடக்கியது. அமலாக்கத் துறையின் இந்த சொத்து முடக்க நடவடிக்கை சரியானது என தில்லியில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிா்த்து காா்த்தி சிதம்பரம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரது மனுவில், எனக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதிதான் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதியே ரூ.1.16 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. அமலாக்கத் துறையின் உத்தரவு மற்றும் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.