படையப்பா படத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு காண்பிக்க வேண்டாம் என சிலர் பயந்ததாகவும், தான் படத்தை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதியில் மறுவெளியீடாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், படையப்பா படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கும் தொடர்பு இருந்ததாக பரவிய வதந்தி தொடர்பாகவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
”நான் கடந்த 1996-ல் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தேன். அப்போதுதான் படையப்பா படம் எடுத்துக்கொண்டிருந்தோம். நீலாம்பரி பாத்திரம் குறித்து அப்போது வதந்தி பரவியது.
படம் வெளியான பின்பு ஜெயலலிதா, படையப்பா படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தார். சிலர் ஜெயலலிதாவிடம் படத்தை காண்பிக்க வேண்டாம் என பயந்தார்கள்.
அதில் என்ன இருக்கிறது என்றுகூறி, நான் பட ரீலை, போயஸ் தோட்ட இல்லத்துக்கு அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னார் என கேள்விப்பட்டேன். அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.
பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நந்தினி கதாபாத்திரம் அதிகமாக பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் படையப்பா.
படையப்பா திரைப்படம் எந்த ஓடிடி தளத்துக்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை. இப்படம் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க: நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய், அதிக சம்பளம் கேட்ட சிவாஜி... ரஜினி பகிர்ந்த படையப்பா பட அனுபவங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.