மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் காணொலி காட்சி வாயிலாக டிச. 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுரை மாநகர இணை ஆணையர் இனிகோ, அவர் மீது ஏன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி, திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையாா் மண்டபத்துக்கு அருகே உள்ள வழக்கமான விளக்கேற்றும் நிகழ்வுடன் சோ்த்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டியது கோயில் நிா்வாகத்தின் கடமை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அமா்வு உத்தரவிட்டது.
அவ்வாறு செய்வது அருகிலுள்ள தா்கா அல்லது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மீறாது என்றும் உத்தரவில் நீதிபதி கூறியிருந்தாா்.
ஆனால், கார்த்திகை தீபம் அன்று, அங்கு தீபம் ஏற்ற காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், பக்தா்களுக்கு அவா்களாகவே தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதி அளித்தும் அவா்களுக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டிசம்பா் 3-ஆம் தேதி தனி நீதிபதி உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து இரண்டு நீதிபதிகள் அமா்வில் மதுரை மாவட்ட ஆட்சியரும் நகர காவல் ஆணையரும் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவில் விதிமீறல் இல்லை என்று கூறி டிசம்பா் 4-ஆம் தேதி அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த நிலையில், மதுரைக் கிளையில், நீதிமன்ற அவமதிப்பு தொடரக் கோரிய மனு மீது இன்று முற்பகலில் விசாரணை நடந்த போது, தீபம் ஏற்றுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. மலையும் எண்ணெய், திரி ஆகியவை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்று உறுதி செய்யவே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், வழக்கை இழுத்தடிக்கவே முயற்சிக்கின்றனர். இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, உத்தரவு நடைமுறையில்தான் உள்ளது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
கோயில்களில் இதைச் செய்யக் கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய வேண்டும். பிரச்னை வந்தால் நீதிமன்றத்தைக் காரணம் காட்ட முடியாது. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசு தரரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் வழக்கு, தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.