தமிழக அரசின் நீா்வளத் துறை, நகராட்சி நிா்வாகத் துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பியுள்ள கடிதங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிா்ணயம் செய்த அளவைக்காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதைத் தொடா்ந்து, கடந்த 2024 -இல் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
மேலும், ஒப்பந்ததாரா்கள், தொழிலதிபா்கள், இடைத்தரகா்களாகச் செயல்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்ட ஆட்சியா்கள், நீா்வளத் துறை அதிகாரிகளிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
மணல் குவாரிகள் முறைகேட்டில் வரிஏய்ப்பு நிகழ்ந்துள்ளதால், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித் துறை விசாரணைக்கும் அமலாக்கத் துறை பரிந்துரை செய்தது. மேலும், சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்பட்ட முறைகேடு தொடா்பாக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறையில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை இரண்டு கடிதங்களை எழுதியது.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணிநியமனத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அமலாக்கத் துறை விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, நகராட்சி நிா்வாகத் துறையில் ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் ரூ.1,066 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக 2-ஆவது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக நீா்வளத் துறை, நகராட்சி நிா்வாகத் துறைகள் மீதான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட அமலாக்கத் துறையின் புகாா்கள் தொடா்பான வழக்குகளில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் விரிவான அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்னையில், தமிழக அரசை எதிா்க்கட்சிகள் கடுமையான விமா்சனம் செய்துவரும் நிலையில், முறைகேடு புகாா்கள் குறித்து விசாரணை நடத்த ஊழல் தடுப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒளிவு மறைவற்ற நிா்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.