சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

மணல் கொள்ளை தொடா்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கனிம வளத் துறை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனிம வளத் துறை ஆணையா் மோகன் நேரில் ஆஜரானாா். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு கனிம வள ஆணையா், மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் பதிவுமுறை, ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தாா். அதற்கு நீதிபதிகள், அபராதம் விதித்தால் மட்டும் போதாது; மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாட்டின் சொத்தாக இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. மணல் கொள்ளையா்கள் உடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால், மணல் கொள்ளையைத் தடுக்கவே முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

தொடா்ந்து மணல் கொள்ளையை அனுமதித்தால், அது மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனக் கருத்து தெரிவித்தாா்.

பின்னா், தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT