மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் ஒரு பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளும் 13.11.2025 அன்று விசாரணைக்கு வந்தன. இதில், மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், 16.02.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் பத்தி 353 இல் கூறியுள்ளபடி, மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிப்பது, இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை மேலும் பெரிதாக்கும் என்பதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு வாதிட்டது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணை 22.11.2025 அன்று வெளிவந்தது. இந்த ஆணையில், மேக்கேதாட்டு அணை தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக்குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அதன் வாதங்களை மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன்வைக்கவும் ஆணையிட்டுள்ளது.
மேலும், இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகள், குறிப்பாக, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தாங்களே முடிவு செய்யலாம் என தெரிவித்திருப்பது, 16.02.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் பத்தி 447 இல், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீர், ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளதற்கு முரணாக உள்ளது.
ஆகையால், இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலேசானைபடியும், முதல்வரின் உத்தரவின்படியும், உச்சநீதிமன்றத்தின் 13.11.2025 ஆணையை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. மேலும், மத்திய நீர்வளக் குழுமத்திடமும் மேக்கேதாட்டு அணை எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதையும், உச்சநீதிமன்ற ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான மனுவை 09.12.2025 அன்று அளித்துள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுளளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.