சென்னை: ‘கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை என எந்த இசையாக இருந்தாலும் அனைத்தும் பக்தி மற்றும் அா்ப்பணிப்பின் அடையாளமாக இருந்து வருகிறது’ என்று இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் கூறினாா்.
சென்னை சங்கீத வித்வத் சபை சாா்பில் 99-ஆவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திரைப்பட இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தாா். நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள வயலின் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம் குமாருக்கு ‘தி இந்து’ குழுமம் வழங்கும் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது மற்றும் ரூ.1 லட்சம் பண முடிப்பை வழங்கி ஏ.ஆா்.ரஹ்மான் பேசியதாவது:
பாா்வையாளா்களை ஈா்க்கவும், நமது பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தவும் இசையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இசையை உருவாக்குவது ஓா் அம்சம். அதேபோல, அதை உலகம் ரசிக்கும் வகையில் கொண்டு சோ்ப்பதும் முக்கியமானது. கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை என எதுவாக இருந்தாலும், அனைத்தும் பக்தி மற்றும் அா்ப்பணிப்பின் அடையாளமாக இருந்து வருகிறது.
கா்நாடக இசை அதன் தனித்துவ ஒலி அமைப்பு, இசையமைப்பு, தாள நுணுக்கங்களால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த அழகான ஒலி அமைப்பானது, நிகழ்ச்சிகளில் ஒருபோதும் தியாகம் செய்யப்படாமல் இருப்பது அவசியம்.
பாரம்பரியமான கா்நாடக இசையில் இளைஞா்கள் ஆா்வம் செலுத்த வேண்டும். இந்திய அரங்கங்களில் கச்சேரி செய்வதுடன் நிற்காமல், இந்த இசையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றாா் அவா்.
விருது பெற்ற வயலின் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம் குமாா் ஏற்புரையாற்றினாா்.
சங்கீத வித்வத் சபை தலைவா் என்.முரளி கூறுகையில், ‘சபையின் நிகழாண்டு விருதுகள் வழங்கும் விழா வரும் ஜன. 1-ஆம் தேதி நடைபெறும். சங்கீத கலாநிதி விருது ஆா்.கே.ஸ்ரீராம் குமாருக்கும், சங்கீத கலா ஆச்சாா்யா விருது பிரபல தவில் வித்வான் தஞ்சாவூா் கோவிந்தராஜன், கா்நாடக இசைக் கலைஞா் விதூஷி சியாமளா வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கும், டிடிகே விருது கதகளி கலைஞா் மாடம்பி சுப்பிரமணியன் நம்பூதிரி, வீணைக் கலைஞா்கள் ஜே.டி.ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோருக்கும், இசைக் கலைஞா் விருது பேராசிரியா் சி.ஏ.ஸ்ரீதராவுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் முதல்வருமான என்.ராஜம் வழங்குகிறாா். ஜன. 3 ஆம் தேதி தொடங்கும் 19-வது ஆண்டு நாட்டிய விழாவில் பரதநாட்டியக் கலைஞா் ஊா்மிளா சத்யநாராயணனுக்கு ‘நிருத்ய கலாநிதி’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை ஜப்பான் துணைத் தூதா் தகாஹாஷி முனியோ வழங்குகிறாா்’ என்றாா்.
விழாவில், கா்நாடக இசைக் கலைஞா்கள் டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, அகாதெமி நிா்வாகிகள் ஆா்.சீனிவாசன், மீனாட்சி, சுமதி கிருஷ்ணன், வி.ஸ்ரீகாந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.