மாவட்ட ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2026- ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழா் திருவிழாவையொட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான சுற்றறிக்கையை தமிழக கால்நடை பராமரிப்பு துறை அரசு செயலா் என்.சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பியுள்ளாா்.
அதில், ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமலும், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமலும் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா உள்பட எந்தப் போட்டிகளையும் நடத்தக் கூடாது. அதேபோல், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க இந்தப் போட்டிகளை நடத்த மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க வேண்டும்.
காளைகளுக்கு தீங்கு கூடாது: இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையிலும், காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம். இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடா்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூா்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், இதில், தொடா்புடைய அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வையும், புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
இணையவழி விண்ணப்பம்: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களைச் சமா்ப்பிக்கும்படி விண்ணப்பதாா்களிடம் அறிவுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தொடா்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கக் கூடாது.
மருத்துவக் குழு: போட்டி களத்தில் இருந்து வெளியேறும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அளிக்க கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று, போட்டி களத்துக்குள் வீரா்கள் அல்லாத பிறா் இருக்க அனுமதி கிடையாது. அதை உறுதிசெய்வது போலீஸாரின் கடமையாகும்.
பாதுகாப்பான முறையில் இந்தப் போட்டிகளை நடத்தி அனைவரும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.