விழுப்புரம்: அன்புமணியின் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று பாமக மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அன்புமணி மீதான ஊழல் வழக்குகள் மற்றும் தேர்தல் ஆணைய குளறுபடிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகங்கள் அமைக்கவும் கட்சியின் நிறுனருக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணையம் புதுதில்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், புதுதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இரா.அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பாமக நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வழிநடத்த முழு அதிகாரம் பெற்ற ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய நிர்வாகக்குழுவில் கூட்டணி குறித்தும், எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கலாம், அதில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், வெற்றி வாய்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும், கட்சிக்கு ஒரு சிறப்பான நிரந்தர வழக்குரைஞர்கள் குழுவை அமைத்துக் கொள்ளவேண்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த கட்சியின் கெளரவத்தலைவருக்குப் பாராட்டுத் தெரிவிப்பது, பாமக விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அன்புமணிக்கு கண்டனம் தெரிவிப்பது, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான ஆவணங்களைக் கொடுத்து, ஏமாற்றிய அன்புமணி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம் தலைவர் தொடர்பான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும், மோசடி வேலைகளையும் சேர்த்து சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகக்குழுக் கூட்டத்தில், பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி , செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ், பொதுச்செயலர் எம். முரளிசங்கர், வன்னியர்சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.