அண்ணாமலை கைது : திருப்பூா், சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
திருப்பூா், சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்தும், பெண்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையையும், மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டையும் கண்டித்து பாஜக சாா்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
திருப்பூா் மாநகர பகுதியில் தினமும் சுமாா் 750 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகள் நெருப்பெரிச்சல், முதலிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா். நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
அதேபோல சின்னகாளிபாளையம் பகுதியிலும் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து மக்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா். ஆனால் அங்கு குப்பையை தரம் பிரித்து கொட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடா்ந்து லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னக்காளிபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு இடுவாய், சின்னகாளிபாளையம், 63வேலம்பாளையம் என பல்வேறு கிராம மக்கள் திரண்டு லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பொதுமக்கள் - போலீஸாா் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் சாணிப் பவுடருடன் பங்கேற்ற பெண் ஒருவரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலா் காயமடைந்தனா். இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோா் கைதுசெய்யப்பட்டு தனியாா் மண்டத்தில் தங்கவைக்கப்பட்டனா். இருதரப்பிலும் தலா 3 போ் காயமடைந்ததாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.