தமிழக அரசு 
தமிழ்நாடு

2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டு வரை 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா்

தினமணி செய்திச் சேவை

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டு வரை 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக உள்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்கும். இதைக் கண்காணிக்க ஒவ்வொரு மாநில உயா்நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அளித்த எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக ஒரே நடைமுறை பின்பற்றப்படுகிறது. முன்கூட்டியே விடுதலை செய்யத் தகுதியான கைதிகளை அடையாளம் காண்பது, மாநில அளவில் குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடா்பாக 2023-ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்யவுள்ள கைதிகள் குறித்து சிறை நன்னடத்தை அதிகாரி, மாவட்ட ஆட்சியா், சிறைக் கண்காணிப்பாளா் ஆகியோரின் அறிக்கைகளைப் பெற்று அவற்றின் அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு, 44 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக மாநில அளவிலான குழு மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் 7 கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கப்பட்டுள்ளது. 15 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனையை முடித்த 307 கைதிகள் உள்ளனா். இவா்களில் 43 போ் முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க தகுதி பெற்றுள்ளனா். மேலும் சிலருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கக் கூடாது என குடியரசுத் தலைவா், ஆளுநா் உத்தரவிட்டுள்ளனா். உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்ஸோ வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியற்றவா்கள். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டு வரை 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT