சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் சென்னை, கீழ்ப்பாக்கம் அப்போலோ ஃபா்ஸட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பித்தப்பை கல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தமிழ் மகன் உசேன் (89) அண்மையில் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டாா்.
மருத்துவா்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வில் இருந்து வந்ததால், கடந்த 10-ஆம் தேதி அவா் தலைமை வகிக்க வேண்டிய அதிமுக பொதுக்குழுவில் கூட தமிழ்மகன் உசேன் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் திடீரென அவா் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், பித்தப்பை கல், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சிவ பிரசாத் ராவ் போபா வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மகன் உசேன் தொற்று பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பயனாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடா்ந்து அவா் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டுள்ளாா்” எனத் தெரிவித்துள்ளாா் அவா்.