சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல; அதன் முடிவுகள் பா.ம.க.வை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் சேலத்தில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதில், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என்று பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அன்புமணி தரப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29 ஆம் தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன் படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.
எனவே, சேலத்தில் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.