விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், விசிக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர், எம்.பி.திருமாவளவன் பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "எதை வைத்தாவது அரசியல் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேடுவதே அந்தக் குழுவின் நோக்கம். மதுரையில் திமுக அரசை எதிர்த்து போராடுவதற்குகூட எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இந்துக்களுக்கான உண்மையான தேவைகளுக்காக எந்த இந்து அமைப்புகளும் இதுவரை போராடியதில்லை.
குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றி விட்டார்கள். சுப்பிரமணியருக்கு உரிய இன்னொரு பெயர்தான் ஸ்கந்தன். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறீர்கள்?
தமிழ்க் கடவுள் முருகன் எப்படி சமஸ்கிருதம் பேசுகிறவர்களுக்கு கடவுளாக முடியும்? முருகன் என்ற பெயரை சொல்வதற்கே ஹெச்.ராஜாவுக்கு தகுதியில்லை. எந்த வகையில் அவருக்கு முருகன் சொந்தமாக முடியும்? தமிழ்நாட்டில் ஒருபோதும் உங்கள் ஜம்பம் பலிக்காது.
நீதிமன்றம் நிபந்தனை விதித்தபோதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பதுதான் அவர்களது நோக்கம்.
ஓட்டு பெறுக்குவதற்காக அரசியலுக்கு வரவில்லை. நாளையே விசிக இருப்பது பிரசனை என திமுக கருதினால்கூட நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.
திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது. உ.பி.யில் இருப்பதைபோல அல்ல, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் கல்வி, சோறு எல்லோருக்கும் கிடைத்து விடுமா? எய்ம்ஸ் வந்து விடுமா? அது சர்வே கல். நாயக்கர் காலத்தில் நடப்பட்ட அளவை கல். உச்சி பிள்ளையார் கோவில் அருகேயுள்ள தூணில்தான் 400 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை.
இப்போது இருவரை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். திமுக ஒரு தீய சக்தி என்பதுதான் விஜய்யின் ஒரே நோக்கம். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காகதான் விஜய் கட்சி துவங்கியிருக்கிறீர்கள். விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது.
பாமகவில் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்க மாட்டோம். சாதியவாத, சநாதன அமைப்புகளுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தேர்தல் வரும் போகும், இந்த மண்ணின் மக்களை காப்பாற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என பேசிய ஹெச்.ராஜாவை ஏன் இன்னும் அரசு கைது செய்யவில்லை? திருமாவளவன் இப்படி பேசினால் சும்மா விடுவார்களா? பெரும்பான்மை இந்துக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை தான் ஆதரிக்கிறார்கள்” என்றார்
திருமாவளவன் மேடையில் பேசும்போது, அருகே கடந்து சென்ற பேருந்தில் இருந்த ஐயப்பப் பக்தர்களை நோக்கி கையசைத்து "சாமியே சரணம் ஐயப்பா" எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.