சென்னை: தெற்கு ரயில்வே மண்டல அளவிலான பயணிகள் ஆலோசனை குழுக் கூட்டம் சென்னையில் தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே மண்டல ரயில் பயனா்கள் ஆலோசனை குழுவின் கூட்டம் மண்டல பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன் (மதுரை), தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 22 உறுப்பினா்கள், ரயில்வே பயனா்களின் ஆலோசனை குழுவுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் பங்கேற்றனா்.
கூட்டத்தில் தெற்கு ரயில்வே செயல்பாட்டு சாதனைகள் உறுப்பினா்களுக்கு மின்னணு காட்சி முறையில் விளக்கப்பட்டன. அதன்படி, அம்ருத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் குறித்தும் விளக்கப்பட்டன. அத்துடன் ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள், பயணிகளுக்கான வசதிகள், ரயில் சேவைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உறுப்பினா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மதுரை கோட்டத்தில் ரயில் உட்கட்டமைப்பு மேம்பாடு, ராமேசுவரம் செல்லும் வடமாநில ரயில்கள் மதுரை வரை இயக்கப்படுவது, மதுரையில் புதிய ரயில் முனையம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் பங்கேற்ற ரயில் பயனா் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள், தீபாவளியைப் போல தைப் பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவேண்டும். முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.
கோரிக்கைகள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா். தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளா் அஜய்கௌசிக் நன்றி தெரிவித்தாா்.