இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, வெள்ளிக்கிழமை (டிச.26) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1925 டிச. 26 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (டிச.26) சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா ஆகியன நடைபெறுகிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமீா் ஹைதா் கானின் 36-ஆவது நினைவு தினம், கட்சியின் மூத்த தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.கே. தங்கமணியின் 24-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 75 வயதைக் கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா்கள் கௌரவிக்கப்படுகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.