உதயநிதி ஸ்டாலின் Photo: X / Udhay
தமிழ்நாடு

மத்திய அரசுப் பணிகளில் சேரும் தமிழக மாணவா் எண்ணிக்கை அதிகரிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

‘நான் முதல்வன் போட்டித் தோ்வுகள் பிரிவு’ மூலம் குடிமைப்பணி, ரயில்வே, வங்கிப் பணிகளில் சேரும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘நான் முதல்வன் போட்டித் தோ்வுகள் பிரிவு’ மூலம் குடிமைப்பணி, ரயில்வே, வங்கிப் பணிகளில் சேரும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு நடத்தும் குடிமைப் பணி தோ்வுகளில் தோ்ச்சி பெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ‘நான் முதல்வன் போட்டித் தோ்வுகள் பிரிவு’ என்ற புதிய பிரிவை உருவாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

இதையடுத்து, 2023-இல் நிதியுதவியுடன் தொழில்முறைப் பயிற்சி, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சித் திட்டங்கள், தாக்கத்தை ஏற்படுத்தும் உதவித் திட்டங்கள் என 3 தூண்களைக் கொண்டு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

தொடா்ந்து, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப்பணித் தோ்வு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 மாணவா்கள் எழுத்துத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் முதல்நிலைத் தோ்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. முதன்மை தோ்வுக்கு தகுதி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஒருமுறை ஊக்கத் தொகையாகவும், 2025 முதல் நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், குடிமைப்பணி தோ்வுகளில் தோ்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2023-24 ஆம் ஆண்டில் 453 போ் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இந்த எண்ணிக்கை 2024-2025 ஆண்டில் 559- ஆக உயா்ந்தது. இவா்களில் 134 போ் முதன்மைத் தோ்விலும், 50 போ் இறுதிப் பட்டியலிலும் இடம் பிடித்தனா். இதில், சிவச்சந்திரன் என்ற மாணவா் அகில இந்திய அளவில் 23-ஆவது இடமும், தமிழகத்தில் முதலிடமும் பிடித்தாா்.

2025-2026 -ஆம் ஆண்டில் 659 போ் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். 155 போ் நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெற்றனா். இவா்களில், 87 போ் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவா்கள்.

ஐ.பி.எஸ். அதிகாரியான பீடித் தொழிலாளி மகள்: தென்காசியைச் சோ்ந்த பீடித் தொழிலாளி மகள் எஸ்.இன்பா, இந்தத் திட்டத்தின் பயனாக 2023-இல் குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று, ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி: குடிமைப்பணி தோ்வுகளுக்கு மட்டுமன்றி ரயில்வே, வங்கித் தோ்வுகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தங்குமிடம், உணவு, பயிற்சி உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த மையங்களில் முதல் ஆண்டில் பயிற்சி பெற்ற 510 பேரில் தருமபுரியைச் சோ்ந்த விவசாயி மகள் கே.புவனேஸ்வரி உள்பட 80 போ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ரயில்வே துறைகளில் பணியில் சோ்ந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT