பிரவீன் சக்கரவர்த்தியின் நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் விமர்சித்துள்ளார்.
அவரின் பதிவைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாஜக தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்பிக்களும் பிரவீன் சக்கரவர்த்தி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை பேசியதாவது:
“பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது எல்லாம் காங்கிரஸின் குரல் அல்ல. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தனிநபராக பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்ததற்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தியா கூட்டணி பலமாக இருக்கிறது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற மறைமுகமாக சில சக்திகள் வேலை பார்க்கின்றன. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
உ.பி.யையும், தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஏழை மக்களின் வீட்டை இடிக்கும் புல்டோசர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகின்றது. அவர் யோகியின் குரலாகப் பேசுகிறாரா?
பிரவீன் சக்கரவர்த்தி கூறிய புள்ளிவிவரங்கள் தவறானவை. 4.61 விழுக்காடு கடனில் அதிமுக ஆட்சி விட்டுச்சென்றது. அதனை 3 விழுக்காடாக குறைத்தது திமுக அரசு. இந்த நிதி ஆளுமையை பொறுத்துக் கொள்ளாமல் பேசுவது நியாமில்லை. காங்கிரஸில் இருந்து பாஜக குரலாகப் பேசுபவர்களை அனுமதிக்க மாட்டோம்.
தலித்துகள், சிறுபான்மையர்கள் இல்லாமல் ஆட்சி செய்வோம் என்று யோகி சொல்கிறார். இதனை பிரவீன் சக்கரவர்த்தி ஆதரிக்கிறாரா? இந்த தரவுகளே தில்லுமுல்லுதான். 2021-க்குப் பிறகு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை தமிழகம் தலைமை தாங்குகிறது.
உ.பி.யில் நடக்கும் காட்டாட்சியை நியாயப்படுத்துபவர் எப்படி காங்கிரஸ்காரராக இருக்க முடியும்?. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் முடிவு எட்டப்படும்.” எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.