மொழி உரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர்தான் பலரின் நினைவுக்கு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் காரணம்பேட்டையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று (டிச., 29) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேடையில் உதயநிதி பேசியதாவது,
''1956 ஆகஸ்ட் மாதம் உருவானது திமுக மகளிரணி. மொழியுரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர்தான் பலருக்கும் நினைவுக்கு வருகிறது. தாய் மொழியின் உரத்த குரல் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மகளிரணி மாநாட்டைப் பார்த்து பாஜக, அதிமுகவினர் தூங்கப்போவது இல்லை. சங்கிகள் கூட்டம் பதறுகிறது, அடிமைகள் கூட்டம் கதறுகிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து மகளிருக்குமானதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குரல் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, செய்தியாளர் சந்திப்பின்போது தனது தாய் மொழியான காஷ்மீரியில் பதில் அளித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் உருதுவில் பேசுமாறு கேட்டார். இதற்கு பதில் அளித்த மெஹபூபா, இக்கேள்வியை தமிழ்நாட்டு முதல்வரிடம் கேட்க முடியுமா? எனக் கூறினார்.
மொழி உரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர்தான் பலருக்கு நினைவுக்கு வருகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் பெண்கள் நலனுக்காக திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இயற்றி வருகிறார்.
மகளிர் விடியல் பயணத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 900 சேமிக்கின்றனர். அரசுப் பள்ளியில் குழந்தைகள் வெறும் வயிற்றில் படிக்கச் செல்லக்கூடாது என்பதற்காக காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில, அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ. 1000. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தாய்மார்களுக்கு ரூ. 1000. இவ்வாறு மகளிர் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை திமுக அமல்படுத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, திராவிட மாடல் 2.0 மூலம் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆனால், இது நடக்கக் கூடாது என பல இடையூறுகளை செய்து வருகின்றனர்.
பிகாரில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா. தமிழ்நாடு சமத்துவ பூங்கா என்பதால், அவர்களால் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாது. பாசிச சக்திகளுக்கு கதவு திறந்துவிட நாம் அதிமுக இல்லை. அண்ணா உருவாக்கிய திமுக. முதல்வர் கூறுவதைப்போல தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடிக்க அதிமுக காத்திருக்கிறது. தமிழ்நாட்டு மகளிர் அவர்களை நம்பத் தயாராக இல்லை. மகளிர் மத்தியில் கிடைத்திருக்கக் கூடிய வரவேற்பு இதற்கு சாட்சி'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.