ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி பெறுவதிலிருந்து சிறுபான்மை பள்ளிகளைச் சோ்ந்த 470 ஆசிரியா்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பள்ளி நிா்வாகங்களால் நியமிக்கப்பட்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் 470 ஆசிரியா்களுக்கு கல்வித் தகுதி உள்ளிட்ட இதர விவரங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்த பின்னா், தொடா்புடைய அதிகாரம் பெற்ற அலுவலா்களால் நியமன ஏற்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையைக் கருத்தில் கொண்டும், மாநில அரசின் தலைமை வழக்குரைஞரிடமிருந்து பெறப்பட்ட சட்டக் கருத்தின் அடிப்படையிலும் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்ட 13.12.2023-க்கு முன்னா் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி பெறாமல் பணிபுரிந்து வருபவா்களுக்கு நியமன ஒப்புதல் அளிக்க கோரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று இந்த ஆணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் சிறுபான்மை பள்ளிகளைச் சோ்ந்த 316 பட்டதாரி ஆசிரியா்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 154 ஆசிரியா்களுக்கும் என 470 ஆசிரியா்களுக்கு டெட் தோ்ச்சியிலிருந்து விலக்களிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.